ரூ.1.65 கோடியில் நடந்து வந்த கோதண்டராமர் கோவில் குளம் புனரமைப்பு பணி நிறைவு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்


ரூ.1.65 கோடியில் நடந்து வந்த கோதண்டராமர் கோவில் குளம் புனரமைப்பு பணி நிறைவு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

ரூ.1.65 கோடியி்ல் நடந்து வந்த சென்னை கோதண்டராமர் கோவில் குளம் புனரமைப்பு பணி நிறைவடைந்தது. இதையடுத்து கோவில் குளத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை

சென்னை மேற்கு மாம்பலத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்துக்கு வெளியே 14 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 350 அடி நீளம், 225 அடி அகலம் கொண்ட பெரிய குளம் உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கோவில் மேம்பாட்டு நிதி மற்றும் ஆணையர் பொதுநல நிதியிலிருந்து ரூ.24 லட்சத்து 96 ஆயிரத்து 64 செலவில் கடந்த 1997-ம் ஆண்டில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திருப்பணி தொடங்கப்பட்டு, 1998-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதன்பிறகு 2017-ம் ஆண்டு மே 7-ந்தேதி கோவில் குளத்தை பொதுமக்களுடன் இணைந்து அப்போதைய கொளத்தூர் எம்.எல்.ஏ.வாக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் தூர்வாரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கோவில் குளம் சென்னை மாநாகராட்சி ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகரம்) திட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை நிபந்தனைகளுக்குட்பட்டு புனரமைத்தல் மற்றும் மேம்படுத்திடும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டு, சென்னை மாநகராட்சி மூலம் ரூ.1.65 கோடி மதிப்பீட்டு செலவில் புதுப்பிக்கும் பணி அப்போதைய சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனால் 2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

கரைப்பகுதிகள் உடைந்தும், மிகவும் பழுதுபட்டு இருந்த இக்குளத்தை தற்போது தூர்வாரி கரைகளை பலப்படுத்துதல், கரையின் சுற்றுப்பகுதியில் கருங்கல் பதித்தல், சுற்றுச்சுவர் உயர்த்தப்பட்டு இரும்பு கம்புவேலி மற்றும் கிரில் அமைத்தல், துருப்பிடிக்காத கைப்பிடிகளுடன் கூடிய நடைபாதை அமைத்தல், நாட்டு மரக்கன்றுகள், ஆயுர்வேத செடிகள் மற்றும் வண்ணப் பூச்செடிகள் நடுதல், சுற்றுச்சுவரில் கண்கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைதல் மற்றும் வர்ணம் பூசுதல், செடிகளின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளைக்கிணறு அமைத்தல், குளத்தைச் சுற்றி பாதசாரிகள் அமரும் இருக்கைகள், மின்கம்பங்கள் அமைத்தல் மற்றும் கேமராக்கள் பொருத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்தநிலையில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்ட கோதண்டராமர் கோவில் குளத்தை தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story