வாகனங்களை திருடி நூதன முறையில் விற்ற 2 பேர் கைது - 42 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


வாகனங்களை திருடி நூதன முறையில் விற்ற 2 பேர் கைது - 42 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x

போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாகங்களை திருடி நூதன முறையில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 42 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை

போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து போரூர் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், போரூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் போரூரில் உள்ள வணிக வளாகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி ஒருவர் திருடி செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

அந்த காட்சிகளை வைத்து விசாரித்தபோது மோட்டார் சைக்கிளை திருடியது அயனாவரத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 42) என்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் ரமேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, அவர் உபயோகமற்ற பழைய வாகனங்களை வாங்கி, அதன் ஆர்.சி. புத்தகத்தை வைத்துகொண்டு, அதே மாதிரியான வாகனங்களை பார்த்து திருடி உள்ளார்.

மேலும், திருடப்பட்ட வாகனங்களை பழைய வாகனக்களின் ஆர்.சி. புத்தகத்தை காட்டி கோயம்பேட்டை சேர்ந்த மெக்கானிக் செல்வம் (38), என்பவருடன் சேர்ந்து விற்றுள்ளார். இதனையடுத்து செல்வத்தையும் போலீசார் கைது செய்தனர்.

அவரிகளிடம் இருந்த 42 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் போரூர் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


Next Story