விழுப்புரத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
விழுப்புரத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று இரவு விழுப்புரம் முத்தாம்பாளையம் புறவழிச்சாலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரினுள் 25 சாக்கு மூட்டைகள் இருந்தது.
உடனே அந்த சாக்கு மூட்டைகளை போலீசார் கைப்பற்றி பிரித்துப் பார்த்தபோது அந்த மூட்டைக்குள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 260 கிலோ எடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காரில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும், மேல்மருவத்தூர் பாலாஜி நகர் 2-வது தெருவை சேர்ந்த மோட்டாராம் மகன் புண்டாராம் (வயது 38), திண்டிவனம் விட்டலாம்பாக்கம் சாலை ராமதாஸ் தெருவை சேர்ந்த மோகன் மகன் பாஸ்கரன் (32) என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து சென்னையில் இருந்து காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விழுப்புரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்ய இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார், விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.