திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்
திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் அடுத்த நெமிலியகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது36). இவர் கடந்த 20-ந்தேதி மாலை கனகவல்லிபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தபோது, கனகவல்லிபுரம் போலீஸ் பயிற்சி பள்ளி அருகே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார். இந்த நிலையில், அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அதேபோல், திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர். கோஹினூர் அவின்யூவை சேர்ந்தவர் ரோஜா (24) வக்கீலான இவர், உழவர் சந்தை அருகே சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி ரோஜா மீது மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது இடது கை மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.