சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பணியில் 2 மோப்ப நாய்கள் சேர்ப்பு - கேக் வெட்டி வரவேற்ற அதிகாரிகள்


சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பணியில் 2 மோப்ப நாய்கள் சேர்ப்பு - கேக் வெட்டி வரவேற்ற அதிகாரிகள்
x

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பணியில் அதிக சக்தியுடைய 2 மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டது. அவற்றை கேக் வெட்டி அதிகாரிகள் வரவேற்றனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் தங்களுக்கு உதவும் வகையில் மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனா். வெடி மருந்துகள், வெடிகுண்டு போன்ற அபாயகரமான பொருட்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்களை பயன்படுத்துகின்றனா்.

தற்போது சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய் பிரிவில் புதிய வரவாக பெல்ஜியம் நாட்டின் 'பெல்ஜியம் மெலினோஸ்' இனத்தைச் சேர்ந்த 2 நாய் குட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வகை நாய்கள், சர்வதேச அளவில் மோப்ப சக்தியில் சிறந்து விளங்க கூடியவைகள். இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் இவை சேர்க்கப்பட்டுள்ளன. 'பைரவா' மற்றும் 'வீரா' என இந்த மோப்ப நாய்குட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளன.

இந்த நாய்குட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் 6 மாத பயிற்சி முடித்து உள்ளன. அங்கு வெடிபொருட்கள், வெடிகுண்டுகள், வெடி மருந்துகளை கண்டறியும் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மோப்ப பயிற்சியில் சிறப்பாக செயல்பட பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் மாத இறுதியில் தங்கள் 6 மாதகால பயிற்சியை நிறைவு செய்த இந்த 2 நாய் குட்டிகளும் விமான நிலைய பணியில் இணைக்கும் விழா நேற்று நடந்தது. 2 மோப்ப நாய்களை வரவேற்கும் விதமாக விமான நிலைய இயக்குனர் சரத்குமார், விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் மேத்யூ ஜோலி, விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கேக் வெட்டினர். பின்னர் வெடி பொருட்கள் எங்கு உள்ளது. அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என 2 மோப்ப நாய்களும் செய்து காட்டின.

இதுபற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. ஸ்ரீராம் கூறும்போது, "சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணிக்காக 2 மோப்ப நாய்கள் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளது. இந்த நாய்ளுக்கு 6 மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் 9 மோப்ப நாய்கள் உள்ளன. மேலும் 8 மோப்ப நாய்கள் தேவைப்படும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. பைரவா, வீரா சென்னை விமான நிலையத்தில் தங்களது பணியை தொடங்கி விட்டன" என கூறினார்.

விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் கூறும்போது, "இந்த மோப்ப நாய்கள் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பதில் விரைவாக சிறப்பாக செய்யும். விமான நிலையத்தில் ஆயிரம் கார்கள் நிறுத்தும் வசதி இருந்தது. தற்போது மல்டி லெவல் கார் பார்க்கிங் மூலம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்த முடியும். புதிய முனையத்தில் இந்த மாத இறுதியில் இருந்து பன்னாட்டு வருகை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது" என்றார்.


Next Story