செவிலியர்கள் போராட்டத்துக்கு தடை; ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் செவிலியர்களின் போராட்டத்துக்கு தடை விதித்தும், இந்த போராட்டத்தை சட்டவிரோதமானது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மத்திய அரசு அமைத்த குழு, செவிலியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் சம்பளம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
இந்த சம்பளத்தை வழங்கக்கோரி நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரி ஆகிய ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் செவிலியர்கள் கடந்த 11–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆஸ்பத்திரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று இந்த இரு ஆஸ்பத்திரி நிர்வாகமும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா பிறப்பித்த உத்தரவில், இந்த இரு ஆஸ்பத்திரிகளுமே குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகள் ஆகும். அப்பாவி நோயாளிகள், குழந்தைகள் உயிருக்கு போராடும் நிலையில், செவிலியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினால், அது கண்டிப்பாக நோயாளிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனால், இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கிறேன். இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்கிறேன். இந்த இரு ஆஸ்பத்திரிக்கும் தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.