நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக - முதலமைச்சர் பழனிசாமி


நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 16 Dec 2020 4:19 PM IST (Updated: 16 Dec 2020 4:19 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் என்றும், ஆதரித்தது திமுக என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர், 

தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,ஆய்வு செய்து வருகிறார்.

இதன்படி கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத் துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நல வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொது சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தொழில்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் ரூ.627 கோடி மதிப்பிலான 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.118.53 கோடி மதிப்பிலான 28 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அதன் பின்பு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கரூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பொதுமக்களை தேடிச் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று நிறைவேற்றி வருகிறது. 

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக. நீட் தேர்வை தடை செய்வதற்கு போராடுவது அதிமுக. ஏழை மாணவர்கள் பயன்பெறுவதற்காகவே நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தோம். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கி உள்ளோம். அடுத்த ஆண்டு புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கும்போது கூடுதலாக 1,650 இடங்கள் கிடைக்கும்.

அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டங்கள் என்றாலும் அதை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்; இதில் எந்த மாற்றமும் இல்லை. வேளாண் சட்டங்களை தரகர்கள்தான் எதிர்க்கின்றனர். எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தவில்லை. அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான பிரசாரங்களை பரப்பி வருகின்றனர். புதிய வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. அரசு பொதுமக்களைத் தேடிச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. 

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் தற்போதும் தொடர்கிறது. தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டன. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்யப்பட்டனர். தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Next Story