பள்ளிப்பாட புத்தகங்களில் 'மத்திய அரசு' என்ற பெயர் 'ஒன்றிய அரசு' என மாற்றப்படும் - திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி

பள்ளிப்பாட புத்தகங்களில் 'மத்திய அரசு' என்ற பெயர் 'ஒன்றிய அரசு' என மாற்றப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள, இந்நிறுவனத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்து நேற்று உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்தித்து திண்டுக்கல் ஐ. லியோனி இன்று வாழ்த்து பெற்றார்..
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “இந்த பதவி வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் கல்வியை சுமையாக நினைக்காமல், மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் நூல்களை மாற்ற வேண்டும். சமசீர் கல்வியை முன் உதாரணமாக வைத்து பாட நூல்களை தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றப்பட்டு இனி வரும் காலங்களிக் ஒன்றிய அரசு என அச்சிடப்படும்” என்று திண்டுக்கல் ஐ. லியோனி கூறினார்.
முன்னதாக தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை தயாரித்து, அச்சிட்டு வினியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம் ஆகும். இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள், மேல்நிலைப் பள்ளிக்கான தொழிற்கல்விப் பாடப்புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் பல் நுட்பக் கல்லூரிக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியை இக்கழகம் திறம்பட மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story