பள்ளி மாணவன் கொலை; குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் - விஜயகாந்த் அறிக்கை
அம்பையில் பள்ளி மாணவன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாணவர், கடந்த 25-ந்தேதி அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் கையில் கயிறு கட்டி இருப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு மாணவருக்கு காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அந்த மாணவர் உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிப் பருவத்திலேயே சாதிக்காக சக மாணவனை தாக்குவது அபாயகரமானது என்றும் சாதிக்காக மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story