3 பேர் உயிரிழந்த சம்பவம்: கேளிக்கை விடுதி உரிமையாளர் கைது


3 பேர் உயிரிழந்த சம்பவம்: கேளிக்கை விடுதி உரிமையாளர் கைது
x

கோப்புப்படம்

3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் சேமியர்ஸ் சாலையில் தனியார் கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. அங்கு நேற்று முன் தினம் ஏராளமானோர் மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 3 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இடிபாடுகளை அகற்றும் வல்லுநர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு படையினருடன் இணைந்து அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கூரை இடிந்து விழுந்தபோது, அப்பகுதியில் 30 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 3 பேர், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்தது திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன் ராஜ் (48), மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (22), லல்லி (24) என்ற தொழிலாளர்கள் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கேளிக்கை விடுதியின் மேலாளர் சதீஷ் கைது செய்யப்பட்டார். அதன் உரிமையாளர் அசோக் குமாரை (வயது 45) போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், அசோக் குமார் இன்று இரவு கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே, குறிப்பிட்ட தனியார் விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story