முகத்தில் 'மிளகு ஸ்பிரே' அடித்து துணிகரம்: தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி - நண்பர் உள்பட 3 பேர் கைது


முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்து துணிகரம்: தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி - நண்பர் உள்பட 3 பேர் கைது
x

தனியார் நிறுவன ஊழியரின் முகத்தில் ‘மிளகு ஸ்பிரே’ அடித்து ரூ.50 லட்சத்தை பறித்துச்சென்ற நண்பர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர்உசேன் (வயது 55). இவர், சென்னை எழும்பூரில் உள்ள பணம் பரிமாற்றம் செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை எடுத்துக்கொண்டு கொத்தவால்சாவடியில் உள்ள அந்த நிறுவனத்தின் மற்றொரு கிளையில் கொடுப்பதற்காக சென்றார்.

இதற்காக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தனது நண்பரான காஜா மொய்தீன் (45) என்பவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு சென்றார். சென்டிரல் வழியாக வால்டக்ஸ் ரோடு யானைகவுனி பெருமாள் கோவில் தெரு அருகில் அவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், ஜாகீர்உசேனை வழிமறித்து, அவரது முகத்தில் 'மிளகு ஸ்பிரே' அடித்தனர். இதனால் ஜாகீர்உசேன் நிலைகுழைந்தார். உடனே மர்மநபர்கள், அவரிடம் இருந்த ரூ.50 லட்சத்தை பறித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து ஜாகீர் உசேன் கொடுத்த புகாரின் பேரில் யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், புஷ்பராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜாகீர் உசேனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய அவருடைய நண்பர் காஜா மொய்தீன், ஆற்காட்டை சேர்ந்த அஜித்குமார் என்ற அஜய் (29), சுபாஷ்குமார் (38) ஆகியோருடன் சேர்ந்து ஜாகீர் உசேனிடம் மோட்டார் சைக்கிளை கொடுத்து அனுப்பிவிட்டு அவரை பின்தொடர்ந்து வந்து முகத்தில் 'மிளகு ஸ்பிரே' அடித்து பணத்தை பறித்துச்சென்றது தெரிந்தது.

இதையடுத்து காஜாமொய்தீன், அஜய் மற்றும் சுபாஷ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.24 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர்.

மீதி பணம் அவர்களிடம் இருப்பதாக போலீசாரிடம் இவர்கள் 3 பேரும் தெரிவித்துள்ளனர். எனவே தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆனால் பறிமுதலான அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அது ஹவாலா பணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story