மோட்டார் சைக்கிள்களை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
புதுக்கோட்டை நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டுப்போகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதையடுத்து மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் நகர உட்கோட்ட சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சசிகுமார் (வயது 23), சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சோ்ந்த முத்து (21) மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
இவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர்களை சிறையிலும், சிறுவர்களை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேரில் அழைத்து பாராட்டினார்.