வெவ்வேறு சம்பவங்களில் போதை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது


வெவ்வேறு சம்பவங்களில் போதை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது
x

மாவட்டம் முழுவதும் வெவ்வேறு சம்பவங்களில் போதை பொருட்கள் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த தமிழக அரசு பஸ்சை அவர்கள் நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த பஸ்சில் 2 சூட்கேஸ்களில் வைத்து நூதன முறையில் கடத்த முயன்ற தடை செய்யப்பட்ட 30 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் சிக்கியது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ்சில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சூட்கேசில் நூதனமுறையில் குட்கா கடத்தி வந்த ஓடிசாவை சேர்ந்த திலீப் விஸ்வா (வயது 35), சுந்தர் கான் (30) ஆகிய 2 பேர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந் தனர். அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த வாலிபரிடம் கால் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொன்னேரி பெருமாள் கோவிலை சேர்ந்த ஜனார்த்தனன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், ஆந்திர மாநிலம் நகரி அடுத்த ஓஜிகுப்பம் பகுதியில் இருந்து திருத்தணி நகருக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் நேற்று பொன்பாடி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின் பேரில், போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில், 2 கிலோ கஞ்சா பிடிப்பட்டது. இது தொடர்பாக திருத்தணி வள்ளியம்மாபுரம் சேர்ந்த ஓம்பிரகாஷ் (25) என்பவர் கைதானார்.


Next Story