40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்தார்கள் - அப்பாவு பேச்சால் பரபரப்பு


40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்தார்கள் - அப்பாவு பேச்சால் பரபரப்பு
x

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சி களேபரமானது.

சென்னை,

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு டிடிவி தினகரன் சிறை சென்றபோது, அதிமுகவின் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் அரங்கத்தில் எழுத்தாளர் இரா.குமார் எழுதிய "நடையில் நின்றுயர் நாயகன்" என்னும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. திமுக ஆட்சியின் சிறப்பை விளக்கி எழுதியுள்ள அப்புத்தகத்தை, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு,

ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சி களேபரமானது. அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரான பிறகு, 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து அதிமுக ஆதரவை பின் வாங்கினர். அந்த சமயம் டிடிவி தினகரன் திகார் சிறைக்கு சென்றார். அப்போது எனக்கு ஒரு நண்பர் தொடர்புகொண்டு , 40 அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்து எங்கே செல்வது என தெரியாமல் இருந்து வருகின்றனர். அவர்களை திமுக பக்கம் வரவழைத்து நாம் ஆட்சியை கைப்பற்றலாம் என கூறினார். இந்த தகவலை நான் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினிடம் கூறினேன்.

இந்த விஷயம் பற்றி சிறிது யோசித்து விட்டு, இந்த 40 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நாம் ஆட்சியை பிடிக்க வேண்டாம். நாம் நேரடியாக மக்களிடம் செல்வோம். அவர்கள் வாய்ப்பளித்தால் ஆட்சி அமைப்போம் என கொள்கை பிடிப்போடு இருந்தவர் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தலைவர்களை கொச்சைப்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

1 More update

Next Story