வார இறுதி நாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று 400 சிறப்பு பஸ்கள் இயக்கம் - அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
வார இறுதி நாள்களில் பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இன்று 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வார இறுதி நாள்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று மற்றும் 5-ந் தேதி (சனிக்கிழமை), 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய வார இறுதி நாள்களை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளன. இதுவரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 6 ஆயிரத்து 948 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.
இருந்த போதிலும் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 400 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 8 ஆயிரத்து 107 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு பஸ்கள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் 2-வது சனிக்கிழமை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைக்கு மேல் ஒரே தடத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகையாக அடுத்து வரும் தொடர் பயணங்களுக்கு அதாவது 6-வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டணச்சலுகை அளிக்கப்படுகிறது. இதன்படி கடந்த ஜூலை மாதம் 857 பயணிகளுக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.