ஊட்டியில் மண் சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் - 4 பேர் கைது


ஊட்டியில் மண் சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் - 4 பேர் கைது
x

கட்டுமானப் பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் பிரிட்ஜோ என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஒரு சொகுசு பங்களா கட்டப்பட்டு வந்தது. இதன் அருகே சுமார் 20 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. இதற்காக மண்ணை தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தின் அருகே பழைய பயன்படாத நகராட்சி கழிப்பிட கட்டிடம் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று கட்டுமானப் பணியின்போது எதிர்பாராத விதமாக மண்சரிவு ஏற்பட்டு கழிப்பிட கட்டிடம் சரிந்து விழுந்தது. இதனால் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 6 பெண்கள் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். இதன்படி நிலத்தின் உரிமையாளர் பிரிட்ஜோ, காண்டிராக்டர் பிரகாஷ், மேஸ்திரிகள் ஜாகிர் அகமது மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story