ஊட்டியில் மண் சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் - முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு


ஊட்டியில் மண் சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் - முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
x

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் பிரிட்ஜோ, காண்டிராக்டர் பிரகாஷ், மேஸ்திரிகள் ஜாகிர் அகமது மற்றும் ஆனந்தராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் இன்று (7.02.2024) நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் ராதா (38), பாக்கியம் (36), முத்துலட்சமி (36), உமா (35) சங்கீதா (30) மற்றும் சகிலா (30) ஆகிய 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜெயந்தி (56), சாந்தி (45), தாமஸ் (24) மற்றும் மகேஷ் (23) ஆகிய 4 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




Next Story