ராஜீவ் காந்தி, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிகளில் குஜராத்தை சேர்ந்த 60 அரசு டாக்டர்கள் நேரில் பார்வையிட்டனர்


ராஜீவ் காந்தி, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிகளில் குஜராத்தை சேர்ந்த 60 அரசு டாக்டர்கள் நேரில் பார்வையிட்டனர்
x

ராஜீவ்காந்தி மற்றும் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிகளில் குஜராத்தை சேர்ந்த 60 அரசு டாக்டர்கள் பார்வையிட்டனர். பின்னர் மருத்துவ கட்டமைப்பு, இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து கேட்டறிந்தனர்.

சென்னை

இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் மருத்துவ கட்டமைப்புகளில் முக்கிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர், இந்த திட்டம் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, மருத்துவத்துறையை மேம்படுத்தும் வகையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், தேசிய சுகாதார பணிக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று குஜராத்தை சேர்ந்த நரம்பியல், இதயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் 60 அரசு டாக்டர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியை நேரடியாக வந்து பார்வையிட்டனர்.

அப்போது, டீன் தேரணிராஜன் மற்றும் தமிழக டாக்டர்களிடம் அரசு ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள், நம்மை காக்கும் 48, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விவரமாக கேட்டறிந்தனர். மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தை குஜராத் மாநிலத்தில் செயல்படுத்துவது குறித்தும், திட்டம் செயல்படும் விதம் குறித்தும் விவரமாக கேட்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து, 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை பிரிவை நேரடியாக பார்வையிட்டு ஆச்சர்யத்தில் வியந்தனர். தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியை பார்வையிட்டனர். அப்போது, தமிழ்நாட்டின் அரசு ஆஸ்பத்திரிகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ஒரு மிகப்பெரிய முன்னுதாரனமாக இருப்பதாக குஜராத் டாக்டர்கள் பாராட்டினர்.


Next Story