மூதாட்டியை கொன்று 63 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


மூதாட்டியை கொன்று 63 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

திருச்சி அருகே மூதாட்டியை கொன்று 63 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரா நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 65). இந்த தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகனும், சத்யபிரியா என்ற மகளும் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது. கருப்பண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதில் மகன் மணிகண்டன் நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டியில் மருந்துகடை நடத்தி வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகள் சத்யபிரியா திருமணமாகி திண்டுக்கல்லில் கணவருடன் வசித்து வருகிறார்.

இதனால் ராஜேஸ்வரி மட்டும் தொட்டியத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் தொட்டியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ராஜேஸ்வரி வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது, வீட்டுக்குள் ராஜேஸ்வரி கை, கால்கள், வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்டு இருந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் அவர் 4 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

அதுமட்டுமின்றி வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ராஜேஸ்வரி தனியாக இருப்பதை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் நுழைந்து ராஜேஸ்வரி சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது கை, கால்களை மற்றும் வாயை துணியால் கட்டி கொள்ளையடித்துள்ளனர். அப்போது, கை, கால் மற்றும் வாயை பலமாக கட்டியதால் ராஜேஸ்வரி மூச்சுத்திணறி இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரியின் மகன் மணிகண்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வந்து பார்த்ததில் வீட்டில் இருந்த 63½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story