அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி


அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி
x

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டு, பயணி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை

அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 318 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த அமெரிக்க நாட்டைச்சேர்ந்த கென்னடி என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அந்த பயணி வலியால் விமானத்துக்குள் துடித்தார்.

விமான பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விமானிக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது விமானம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வழியாக சென்று கொண்டு இருந்தது. இதையடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு மருத்துவ காரணத்துக்காக விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சிங்கப்பூர் விமானத்தை உடனே சென்னையில் தரையிறங்க அனுமதித்ததுடன், பயணிக்கான மருத்துவ குழுவை தயாராக இருக்கும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது.

தயாராக இருந்த சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி அமெரிக்க பயணி கென்னடியை பரிசோதித்தனர். அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதால் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெறவேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பயணி கென்னடிக்கு அவசர கால மருத்துவ விசா வழங்கி விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்க பயணி கென்னடி, மருத்துவ சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறித்து விமான நிறுவன அதிகாரிகள், அமெரிக்க நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் சுமார் 4 மணி நேர தாமதத்துக்கு பிறகு 317 பயணிகளுடன் அந்த விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.


Next Story