சின்ன மாமனார் தலையில் குழவிக்கல்லை போட்டுக்கொன்ற வாலிபர் கைது

மயிலாடுதுறை அருகே, மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட சின்ன மாமனார் தலையில் குழவிக்கல்லை போட்டுக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே, மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட சின்ன மாமனார் தலையில் குழவிக்கல்லை போட்டுக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் மனைவியுடன் தகராறு
மயிலாடுதுறை திருவிழந்தூர் அப்பங்குளம் மேலதெருவை சேர்ந்தவர் மூக்கன். இவரது மகள் மாலதிக்கும், திருவிழந்தூர் ஊராட்சி பர்மா காலனியை சேர்ந்த பிரபாகரன்(வயது 30) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணம் நடந்த சில நாட்களிலேயே பிரபாகரன் மனைவியுடன் அவ்வப்போது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் குடிபோதையில் தன்னிடம் தகராறில் ஈடுபட்டதால் மாலதி கணவருடன் கோபித்துக்கொண்டு தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
சின்ன மாமனார் தட்டிக்கேட்டார்
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தனது மனைவியை சமாதானம் செய்வதற்காக வந்த பிரபாகரன் மாமனார் வீட்டிலேயே தங்கி விட்டார். நேற்று முன்தினம் இரவு பிரபாகரன் குடிபோதையில் வந்து மாலதியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். ஆனால் மாலதி செல்ல மறுத்ததை தொடர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பக்கத்து வீட்டில் வசிக்கும் மாலதியின் சித்தப்பாவும், விவசாய கூலித்தொழிலாளியுமான பாக்கியம்(65) என்பவர் சமாதானம் செய்து நாளைக்கு அழைத்து செல்லலாம் என்று கூறியுள்ளார்.
குழவிக்கல்லை போட்டு கொலை
இதனால் அவருடன் தகராறில் ஈடுபட்ட பிரபாகரன், உன்னால்தான் எல்லா பிரச்சினையும். உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே சென்று உள்ளார்.
இந்த நிலையில் வீட்டு வாசலில் படுத்து தூங்கிய பாக்கியம் நேற்று காலை தலையில் ரத்தம் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகில் ரத்தக்கறையுடன் குழவிக்கல் கிடந்தது. அவரது தலையில் யாரோ குழவிக்கல்லை போட்டுக்கொன்றது தெரிய வந்தது.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பின்னர் பாக்கியத்தின் உடலைக் கைப்பற்றிய போலீசார் அதனை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாக்கியத்தை கொன்றது அவரது மருமகன் பிரபாகரன்தான் என்பது உறுதியானதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சாராய விற்பனையே கொலைக்கு காரணம்
இதற்கிடையே அப்பங்குளம் பகுதியில் உள்ள அய்யனார் கோவில் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பலமுறை போலீசாரிடம் புகார் அளித்தும் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றும், சாராய விற்பனையை தடுத்திருந்தால், இந்த சண்டை கொலையில் முடிந்திருக்காது எனவும் அந்த பகுதி பெண்கள் குற்றம் சாட்டினர்.இதனையடுத்து 10-க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 சாராய மூட்டைகளை கைப்பற்றி எடுத்து வந்து கொலை செய்யப்பட்ட பாக்கியம் வீட்டின் அருகே உள்ள திடலில் போட்டனர். அதனைக் கைப்பற்றிய மதுவிலக்கு போலீசார் உடனடியாக அதனை தீவைத்து அழித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






