காரைக்குடியில் சீரான மின்வினியோகம் வழங்கக்கோரி போராட்டம் நடத்திய மக்களின் காலில் விழுந்த பெண் அதிகாரி


காரைக்குடியில் சீரான மின்வினியோகம் வழங்கக்கோரி போராட்டம் நடத்திய மக்களின் காலில் விழுந்த பெண் அதிகாரி
x
தினத்தந்தி 13 Jun 2023 6:45 PM GMT (Updated: 14 Jun 2023 9:56 AM GMT)

காரைக்குடியில் சீரான மின்வினியோகம் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது பெண் அதிகாரி, மக்களின் காலில் விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் சீரான மின்வினியோகம் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது பெண் அதிகாரி, மக்களின் காலில் விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

காரைக்குடி 27-வது வார்டுக்கு உட்பட்ட தேவர் குடியிருப்பு, பட்டுக்கோட்டையார் தெரு, பாரதியார் தெரு, என்.எஸ்.கே. தெரு, கருணாநிதிநகர், புதுச்சந்தை தெரு, கே.எல்.சி. காலனி ஆகிய பகுதியில் போதிய டிரான்ஸ்பார்மர்கள் இல்லாததால் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து இங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான மின்வினியோகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவுன்சிலர் பிரகாஷ் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சீரான மின்சாரம் வழங்க வேண்டும், மின் வெட்டு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கிருந்த மின்வாரிய செயற்பொறியாளர் லதாதேவி, உதவி பொறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காலில் விழுந்ததால் பரபரப்பு

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தனது அறைக்கு உதவி செயற்பொறியாளர் லதாதேவி அழைத்து சென்றார். புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து சீரான மின்வினியோகம் வழங்க 10 நாள் அவகாசம் கேட்டார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதற்கு எழுத்து பூர்வமான கடிதத்தை கேட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஒரே கூச்சல், குழப்பமாக இருந்தது.

அப்போது செயற்பொறியாளர் லதாதேவி திடீரென போராட்டம் நடத்திய மக்களிடம் வந்து, காலில் விழுந்து குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இந்த பணியை முடித்து தருவதாக கூறினார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னரும் போராட்டம் நடைபெற்ற நிலையில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் அங்கு வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story