மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி


மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி
x

மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிடத்தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை திருவொற்றியூர் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி வடிவுக்கரசி (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. செந்தில்குமார் அடிக்கடி குடித்து விட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் கடந்த மாதம் அவருடைய மனைவி, கணவருடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பலமுறை மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் வராததால், பிரிந்து சென்ற தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். ஆனால் அவரது புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், நேற்று காலை 6 மணியளவில் திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே உள்ள சுமார் 200 அடி உயரமுள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும், இல்லாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் மீரான் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் செந்தில்குமாரிடம் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவருடைய மனைவியோடு பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்தும், அதை ஏற்காத செந்தில்குமார், மனைவியை கூட்டி வந்தால்தான் கீழே இறங்குவேன் என்று கூறி கீழே இறங்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து போலீசார், மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கத்தில் இருந்த செந்தில்குமாரின் மனைவியை அழைத்து வந்தனர். மனைவியை பார்த்தவுடன் செந்தில்குமார் கீழே இறங்கி வந்தார். பின்னர் அவருக்கு மனநல ஆலோசனை வழங்க எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story