ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கருணாநிதி என்னுள் இருந்து இயக்கிக்கொண்டு இருக்கிறார் என்றும், இந்த ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது என்றும் கரூர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

ரூ.500 கோடி நலத்திட்ட உதவிகள்

கரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதாவது, 80 ஆயிரத்து 750 பேருக்கு ரூ.500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. ரூ.28 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 95 பணிகள் திறந்துவைக்கப்பட்டது. ரூ.582 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

6 மாத காலம் அவகாசம்

பொதுவாக, புதிதாக ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கத்திடம் முதல் 6 மாத காலம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். துறைகளை பற்றி தெரிந்து கொள்ளும் காலம். அடுத்த 6 மாத காலம் என்பது திட்டமிடும் காலமாக அது அமையும்.

2-வது ஆண்டுதான் செயல்படுத்த தொடங்கும் காலமாக அமையும். ஆனால் ஆட்சிக்கு வந்த நொடியில் இருந்து செயல்படுத்தும் காலமாக தொடங்கிய ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி.

என்னுள் கருணாநிதி இருக்கிறார்

ஏனென்றால் தலைவர் கருணாநிதி என்னுள் இருந்து இயக்கிக்கொண்டு இருக்கிறார். தலைவர் கருணாநிதி இருந்தால், என்ன நினைப்பார், என்ன சிந்திப்பார், எப்படி செயல்படுத்துவார் என்று நித்தமும் சிந்தித்து, நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.

இந்த ஓராண்டு காலத்தில் திட்டமிட்டோம், செயல்பட்டோம், உருவாக்கினோம், மக்கள் கையில் கொடுத்துள்ளோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மக்களுக்கு பயனுள்ள காலமாக இந்த ஓராண்டு காலம் அமைந்திருக்கிறது.

ஜவுளி பொருட்கள் காட்சி அரங்கம்

கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப்பொருட்களை வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இந்த பொருட்களை காட்சிப்படுத்த தேவையான காட்சி அரங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளதாக சொன்னார்கள். இதனை இந்த அரசு ஏற்று, ஜவுளி உற்பத்தியாளர்களுடன் இணைந்து அத்தகைய பெரும் காட்சி அரங்கம் மற்றும் வளாகம் ஒன்று கரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும்.

அதேபோன்று, கரூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஜவுளிப்பொருட்களின் தரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த பரிசோதனைகளை இங்கேயே மேற்கொள்வதற்காக, சர்வதேச தரத்திலான ஜவுளிப்பொருட்கள் பரிசோதனை நிலையம் ஒன்றும் அமைக்கப்படும்.

ரூ.47 கோடியில் புதிய பஸ் நிலையம்

அதேபோல், மாநகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய பஸ் நிலையம் வேண்டும் என்பது இந்த மாநகர மக்களின் நீண்டகால கோரிக்கை. இதனை நிறைவேற்றக்கூடிய வகையில், திருமாநிலையூரில் ரூ.47 கோடி செலவில் நவீன புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும்.

மற்ற கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு, அமைச்சர்களோடு கலந்துபேசி வருங்காலத்தில் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

மனநிறைவை தரும் ஓராண்டு காலம்

இந்த ஓராண்டு காலமானது எனக்கு மனநிறைவை தருகிறது. ஒவ்வொருவருக்கும் அவரது மனசாட்சிதான் நீதிபதி என்று சொல்லுவார்கள். அந்த வகையில் எனது மனசாட்சி அளிக்கும் தீர்ப்பு இது. இதுதான் மக்களுடைய மனங்களிலும் இருக்கிறது என்பதன் அடையாளம்தான் உங்கள் முகங்களில் பார்க்கக்கூடிய மகிழ்ச்சி.

நான் வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. இப்போது எனக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதற்கு தயாராக இல்லை. அதற்கு நேரமில்லை.

கோரிக்கை

இந்த கூட்டத்தின் வாயிலாக ஒரு கோரிக்கையை கரூர் மாவட்ட தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாவட்ட மக்களுக்கு நான் வைக்க விரும்புகிறேன். என்னவென்று கேட்டால், நமது மாநிலத்தினுடைய தொழில் துறையில் மிகவும் முன்னேறிய மாவட்டங்களில் ஒன்றாக திகழக்கூடிய இந்த கரூர் மாவட்டம்.

இந்த தொழில் வளர்ச்சியில் கரூர் மாவட்டம் மேலும் மேலும் உயர்ந்து ஏற்றுமதியில் சிறந்து இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் திருப்பூர் மாவட்டத்திற்கு இணையாக வளர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என்னுடைய கோரிக்கை. அதனை நீங்கள் நிறைவேற்றுவீர்களா?. மாவட்டங்கள் வளர, மாநிலம் வளரும், அந்த வளர்ச்சிக்கு எந்நாளும் உதவக்கூடிய கலங்கரை விளக்காக திராவிட மாடல் ஆட்சி திகழும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றவர்கள்

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, சிவசங்கர், ஜோதி மணி எம்.பி., கரூர் மேயர் வே.கவிதா, எம்.எல்.ஏ.க்கள் இரா.மாணிக்கம், க.சிவகாமசுந்தரி, துணை மேயர் சரவணன், கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story