'ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது' - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா


ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
x

கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பெய்துள்ளது.

சென்னை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 67.9 செ.மீ மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செ.மீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், 'தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது.

இன்று காலை வரை தாழ்வான பகுதிகளில் வசித்த 7,500 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, 84 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வதற்கு ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் உதவிகள் கோரப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் சூலூர் விமான தளத்தில் இருந்து விமானம் மூலம் நிவாரண உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதை மேகவெடிப்பு என்று கூற முடியாது. வளிமண்டல சுழற்சியால் தொடர் கனமழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. மழை வெள்ள மீட்புப் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் மழை குறைந்ததும் தண்ணீர் வேகமாக வடிந்துவிடும். ஆனால் தூத்துக்குடியில் மழைநீர் வடிய சற்று தாமதம் ஆகலாம்' என்று கூறினார்.


Next Story