காஞ்சீபுரத்தில் கால்நடைகளை சாலையில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை


காஞ்சீபுரத்தில் கால்நடைகளை சாலையில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
x

காஞ்சீபுரத்தில் கால்நடைகளை சாலையில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாநகராட்சி பாரம்பரியம் மிக்க வரலாற்று சிறப்பு பெற்ற நகரம், காஞ்சீபுரம் பட்டு உலக அளவில் புகழ் பெற்றது.

காஞ்சீபுரம் மாநகராட்சியில் பிரதான சாலைகளிலும், கோவில் வளாகங்களிலும், பள்ளி பகுதிகளிலும் கால்நடைகள் சுற்றி திரிவதால் சாலையை பயன்படுத்தும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள், நகருக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள், யாத்திரிகர்கள் ஆகியோர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

போக்குவரத்து நெரிசல் உள்ள நேரத்தில் இவ்வாறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றபோது போக்குவரத்து தடை ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட காரணமாக உள்ளது.

எனவே இந்த கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நகர் பகுதியிலிருந்து அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டரால் ஆய்வுக்கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே. காஞ்சீபுரம் மாநகராட்சியில் கால்நடைகளை வளர்க்கும் அதன் உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை முறைப்படி பாதுகாப்பாக தங்களது கால்நடை தொழுவத்திலோ அல்லது தங்களது வீடுகளிலோ வைத்து பராமரிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், அவ்வாறு பிடித்து சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் உரிமையாளர்கள் அற்ற கால்நடைகள் என கருதி அந்த கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும். யாரும் உரிமை கோர இயலாது.

மேலும் பொது இடங்களில் சாலைகளில் கால்நடைகள் விடும் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு நகர்ப்புறங்கள் விலங்குகள் மற்றும் பறவைகள் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1997 பிரிவு 8 (2), 10 (1), 12 ஆகிய பிரிவுகள் மற்றும் உயிர் மற்றும் உடைமை சேதப்படுத்துவதற்குண்டான இந்திய தண்டனை சட்ட பிரிவின் கீழ் போலீஸ் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story