அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி முறிந்தது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி முறிந்தது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x

அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி முறிந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

கூட்டணியில் இருந்தாலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே சமீப காலமாகவே பனிப்போர் நிலவி வந்தது.

இந்த பனிப்போர் முதல் முறையாக வெளிச்சத்துக்கு வந்தது கடந்த ஜூன் மாதம் தான்.

அண்ணாமலை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேறியது.

அதனைத்தொடர்ந்தும் அண்ணாமலையின் அவ்வப்போதைய பேச்சுகள், தங்கள் கட்சியை விமர்சிக்கும்படி இருப்பதாகவே அ.தி.மு.க.வினர் கருதினர். கருத்து மோதலிலும் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் சனாதனம் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா குறித்து அவர் பேசிய கருத்துகள் பரபரப்பையும், அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியது.

கண்டனம்

இதையடுத்து 'அண்ணாமலை ஆணவத்தில் பேசக்கூடாது' என்று முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் விமர்சித்திருந்தனர். 'அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அ.தி.மு.க. கூட்டணி தேவையில்லை என்று போகவேண்டியது தானே... எங்களுக்கா நஷ்டம்' என்றும் காட்டமாக கருத்து தெரிவித்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கொடுத்த பதிலடி அரசியல் களத்தையே பரபரப்பாக்கியது. 'அ.தி.மு.க. எனும் சிங்க கூட்டத்தை பார்த்து, சிறுநரி அண்ணாமலை ஊளையிடலாமா? இனியும் பா.ஜ.க.வை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. இனி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை. இதுதான் கட்சியின் நிலைப்பாடு' என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார். கூட்டணியில் இனி பா.ஜ.க. தேவையில்லை என்று அ.தி.மு.க.வினர் போஸ்டர் அடிக்கும் நிலை உருவானது.

அ.தி.மு.க. நிர்வாகிகள்

இதையடுத்து 'பா.ஜ.க.பற்றியோ, கூட்டணி பற்றியோ யாரும் விமர்சிக்க வேண்டாம்' என்று அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். அதேவேளை கட்சியின் நிலைப்பாட்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே தெரிவித்துவிட்டார் என்றும் கூறி சூசகமாக பா.ஜ.க. தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

அதேவேளை பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் 'எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லை என்று தங்களை ஆறுதல்படுத்திக்கொண்டு வந்தனர். ஒவ்வொரு முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளிடம் கலந்துபேசி, அவர்களது கருத்துகளை கேட்ட பின்னரே முடிவுகள் அறிவிப்பது எடப்பாடி பழனிசாமியின் வழக்கம்.

'பா.ஜ.க. கூட்டணி வேண்டாம்'

அதன்படி பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. உயர்மட்டக்குழு நிர்வாகிகள் கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் அ.தி.மு.க.வை பா.ஜ.க. விமர்சித்து வருவதாக கண்டனம் தெரிவித்து பேசினர். அண்ணா, ஜெயலலிதா போன்ற கட்சி தலைவர்களை விமர்சித்து பேசும் பா.ஜ.க. கூட்டணியில் நாம் இருக்கவேண்டாம். இனியும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி தேவையில்லை என்று நிர்வாகிகள் அனைவருமே ஏகமனதாக தெரிவித்தனர்.

சிறப்பு தீர்மானம்

இதனைத்தொடர்ந்து உயர்மட்டக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 'நிர்வாகிகளின் கருத்தை மதிக்கிறேன். உங்கள் எண்ணப்படி தான் கட்சியின் நடவடிக்கைகள் இருக்கும். அந்தவகையில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுகிறது. இதற்கான சிறப்பு தீர்மானம் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது' என்றார்.

அதன்பின்னர் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 'பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இனி கட்சிக்காக நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சியின் இளைஞர்-இளம்பெண்கள் பாசறைக்கு வருகிற அக்டோபர் 5-ந் தேதிக்குள் உறுப்பினர்களை நியமித்து, அதுதொடர்பான விவரங்களை கட்சி தலைமைக்கு அனுப்பவேண்டும். இனி நமது செயல்பாடுகள், களப்பணிகள் தீவிரமாக இருக்கவேண்டும். கடுமையாக உழைத்து, நம்பிக்கையுடன் மக்களை அணுகினால் வெற்றி நமதே' என்று குறிப்பிட்டு பேசினார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகல் நடவடிக்கைக்கு நிர்வாகிகள் அனைவருமே ஏகமனதாக வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் வாசிக்கும்போதும் நிர்வாகிகள் உற்சாகமாக கைகளை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

தொண்டர்கள் கோஷம்

முன்னதாக இந்த கூட்டத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 'பா.ஜ.க. வேண்டாம் தலைவா' என்று மகளிர் அணியும், தொண்டர்களும் ஒருசேர குரல் கொடுத்ததையும் கேட்க முடிந்தது.

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே, அலுவலக வளாகத்தில் காத்திருந்த அ.தி.மு.க.வினர் 'பா.ஜ.க. கூட்டணி வேண்டாம்' என்று கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். அவ்வப்போது கட்சி அலுவலக பால்கனியில் நிர்வாகிகள் வந்து, தொண்டர்களை பார்த்து கட்டை விரலை நோக்கி காண்பித்து கொண்டே இருந்தனர். இதற்கிடையில் சிலர், 'பா.ஜ.க. கூட்டணி முறிந்தது' என்று அறிவித்த உடனேயே,அ.தி.மு.க. வினர் ஆர்ப்பரிக்க தொடங்கினர்.

பேட்டி

இதற்கிடையில் கூட்டம் முடிந்து கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை (அண்ணாமலை), கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன், அ.தி.மு.க. மீதும், எங்களுடைய கட்சி தெய்வங்களான அண்ணா, ஜெயலலிதாவை அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.

மேலும், பா.ஜ.க. மாநில தலைமை, கடந்த மாதம் 20-ந் தேதி மதுரையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும் எங்கள் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்த செயல் கட்சியின் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

கூட்டணியில் இருந்து விலகல்

இந்தநிலையில் இன்றைய தினம் (நேற்று) எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அ.தி.மு.க. இன்று முதல் பா.ஜ.க. கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார். (அதாவது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாசித்தார்)

அதனைத்தொடர்ந்து 'இது கட்சியினர் அனைவருமே சேர்ந்து எடுத்த முடிவா?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்ப, 'இது அனைவரும் சேர்ந்து ஏகமனதாக எடுத்த முடிவு' என்று கேபி.முனுசாமி கூறி சென்றார்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த உடனேயே, இதற்காகவே காத்திருந்தது போல அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டம், பாட்டத்திலும் ஈடுபட்டனர். இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


Next Story