எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது


எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது
x

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதற்கு கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

எனவே செயற்குழு, பொதுக்குழுவை கூட்ட அ.தி.மு.க. முனைப்பு காட்டியது. மறுபக்கம் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது பற்றிய ஆவணம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதற்கிடையே பொதுச்செயலாளர் தேர்வுக்கு ஒப்புதல் வழங்க அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று கூடியது.

கட்சி அலுவலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளடக்கிய 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது. எனவே இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து பொதுக்குழுவை எப்போது நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

மேலும் அ.தி.மு.க.வில் கொள்கை ரீதியிலான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானமும் செயற்குழு கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. கர்நாடகாவில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்தும், போட்டியிடுவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

உறுப்பினர் சேர்க்கை நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க. மாநாடு நடத்துவது குறித்தும் பா.ஜ.க. கூட்டணி குறித்தும் இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story