மர்ம நபர்களிடம் இருந்து தப்பினர்... அ.தி.மு.க. பெண் கவுன்சிலரை மகனுடன் கடத்திய கும்பலை பிடிக்க தனிப்படை
கும்மிடிப்பூண்டி அருகே அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகனை கடத்திய கும்பலை பிடிக்க போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் அ.தி.மு.க அம்மா பேரவை இணை செயலாளர் ரமேஷ் குமார் (வயது 46). இவர் பல்லவாடா ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும், ஜாய் (24) என்ற மகளும், ஜேக்கப் (22) என்ற மகனும் உள்ளனர்.
இதில் ரமேஷ்குமாரின் மனைவியான ரோஜா, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். நேற்று முன்தினம் பிற்பகலில் வீட்டில் பெண் கவுன்சிலர் ரோஜாவும், அவரது மகன் ஜேக்கப் மட்டுமே இருந்தனர். அப்போது, முகத்திற்கு முகமுடி போட்டுக்கொண்டு வீட்டிற்குள் புகுந்த 4 மர்ம நபர்கள் சிறிய கைத்துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் பெண் கவுன்சிலர் ரோஜாவையும், அவரது மகன் ஜேகப்பையும் வீட்டில் இருந்த காருடன் கடத்தியதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட 2 பேரின் வாயில் பிளாஸ்டர்களை ஒட்டிய அவர்கள் ரோஜாவிடம் இருந்து 9 பவுன் தங்க சங்கிலியையும் பறித்து கொண்ட நிலையில் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்கையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அந்த கார் தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியை கடந்து சென்ற நிலையில், சம்பவ இடத்தில் தமிழகம் மற்றும் ஆந்திரா என இரு மாநில போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் பெண் கவுன்சிலர் ரோஜா அவரது மகனுடன் கடத்தப்பட்ட காரிலேயே பத்திரமாக வீடு திரும்பினர்.
காரை ஓட்டிச்சென்ற கடத்தல் கும்பலை சேர்ந்த டிரைவர் பரிதாபப்பட்டு அவர்களை அங்கிருந்து தப்ப விட்டதாக தப்பி வந்த மேற்கண்ட 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் 25 வயதிற்கு உட்பட்ட நபர்கள் எனவும், தெலுங்கு மற்றும் இந்தியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ் குமாரிடம் மிரட்டி பணம் பறிக்கவே இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்த பரபரப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நேற்று பெண் கவுன்சிலரின் மகனான ஜேக்கப்பை அழைத்துக்கொண்டு சம்பவம் தொடர்பான பல்வேறு இடங்களில் நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த கடத்தல் என்பது அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ் குமாரிடம் பணம் கேட்டு மிரட்ட மர்ம நபர்கள் திட்டமிட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தனிப்படை போலீசாரின் முழுமையான விசாரணையின் அடிப்படையில் ஓரிரு நாட்களில் தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.