பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x

கோப்புப்படம் 

வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பொன்னேரி,

பொன்னேரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நெசவாளர்களின் துயரத்தை போக்க எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதனை ஜெயலலிதா கடைப்பிடித்தார். இதன் காரணமாக நெசவாளர்கள் பயனடைந்தனர்.

அதேபோன்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கியபோது குறை கூறிய தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்தபின் ரூ.1000 மட்டும் வழங்கினால் போதும் என்று நினைக்கிறது. இதனால், கரும்பு, மஞ்சள், பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை விளைவித்த ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

விவசாய தொழிலுக்கு மூடுவிழா செய்துவிட்டு ஏழைகள் வயிற்றில் அடிக்கக்கூடாது. எனவே அரசு ‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும். காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போன்று சிலர் அங்கும் இங்கும் பதவி சுகத்திற்காக செல்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேறவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களின் கட்சி.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். பாராளுமன்ற தேர்தலிலும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது நிச்சயம். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவையும் அதிருப்தியில் இருக்கின்றன.

அந்த கூட்டணியில் உள்ள 11 கட்சிகளும் கட்டி வைத்துள்ள நெல்லிக்காய் மூட்டை. அதை அவிழ்த்து விட்டால் சிதறி போய்விடும். தி.மு.க. கூட்டணி வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குள் தேய்ந்து போய்விடும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story