திருவொற்றியூரில் டாஸ்மாக் பாரில் லாட்டரி சீட்டு விற்ற அ.தி.மு.க பிரமுகர் கைது


திருவொற்றியூரில் டாஸ்மாக் பாரில் லாட்டரி சீட்டு விற்ற அ.தி.மு.க பிரமுகர் கைது
x

திருவொற்றியூரில் டாஸ்மாக் பாரில் லாட்டரி சீட்டு விற்ற அ.தி.மு.க பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

திருவொற்றியூர், டி.எஸ்.கோபால் நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா (வயது 50). அ.தி.மு.க.பிரமுகரான இவருக்கு திருவொற்றியூர் பி.என்.டி.குடியிருப்பு சாலையில் சொந்தமாக டாஸ்மாக் பார் உள்ளது. இந்த டாஸ்மாக் பாரை ரவிசங்கர் என்பவர் மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த பாரில், மது குடிக்க வருபவர்களிடம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு வாங்க வற்புறுத்துவதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இந்தநிலையில் திருவொற்றியூர் சடையங்குப்பம் பாட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (40) என்ற கூலி தொழிலாளி பாரில் கடந்த 27-ந் தேதி மது குடிக்க சென்றபோது அங்கு வேலை செய்த வாலிபர் ஒருவர், முருகனிடம் ஒரு நம்பர் லாட்டரி வாங்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதை வாங்க மறுத்த முருகனுக்கும் வாலிபருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சேலம், கெங்கவல்லியை சேர்ந்த சுரேந்தர் (27) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பார் உரிமையாளரான ஜோஸ்வாவை தனிப்படை போலீசார் பெங்களூருவில் கைது செய்து நேற்று சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story