அதிமுக-பாஜக கூட்டணி முறிவு - மௌனம் கலைத்தார் எடப்பாடி பழனிசாமி
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல; ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு. கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்; அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலை சந்திக்கின்றனர்?; மாநிலத்தின் உரிமையை காக்க நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும்.
தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் திமுகவினர் முன்னெடுப்பர். மகளிருக்கு இலவச பயணம் எனக் கூறிவிட்டு சில பஸ்களுக்கு மட்டும் பிங்க் நிற பெயின்ட் அடித்துள்ளனர். கொரோனாவில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது தாங்கமுடியாத சுமையை திமுக அரசு சுமத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில், கொடுக்கப்படாத வாக்குறுதிகளையும் சேர்த்து நிறைவேற்றினோம். இவ்வாறு அவர் கூறினார்.