அ.தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுகிறது


அ.தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுகிறது
x

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை (திங்கட்கிழமை) அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது. இதையொட்டி 3 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரமாண்ட அரங்கு தயாராகி வருகிறது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

நீயா? நானா? என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மல்லுக்கட்டி வரும் இந்த சூழலில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டம், அ.தி.மு.க.வை தாண்டி அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

ஏற்கனவே வானகரத்தில் நடந்த முந்தைய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் யாரும் எதிர்பாராத வகையில் முடிவில்லாமல் முடிந்து போனது. எனவே தற்போதைய சூழலில் இந்த பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தி முடித்திட எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பெரும் வேள்வியில் ஈடுபடுவது போல வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரமாண்ட பந்தல்

அதன்படி வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கடந்தமுறை போல இந்தமுறை பொதுக்குழு அமைந்துவிடக்கூடாது என்ற 'சென்டிமெண்ட்' காரணமாக, இந்தமுறை உள் அரங்கில் இல்லாமல் மண்டப வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக 3 ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருக்கிறது.

இந்த அரங்கில் மூத்த நிர்வாகிகள் 100 பேர் அமரக்கூடிய அளவில் பெரிய அளவிலான மேடை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர கூட்டத்தில் பங்கேற்போர் அமரும் இடமானது தரையில் இருந்து 3 அடி உயரத்துக்கு ஏற்றி போடப்பட்டிருக்கிறது. தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் இந்த நடவடிக்கை கையாளப்பட்டிருக்கிறது. மேலும் சாலையில் இருந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்துக்கு என தனியாக தார்ச்சாலை போடப்பட்டிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் படம் புறக்கணிப்பு

எல்லாவற்றையும் விட வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு செல்லும் வானகரம்-அம்பத்தூர் சாலை வரை வரவேற்பு பதாகைகள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்கள் மட்டுமே இருக்கின்றன. ஓ.பன்னீர்செல்வத்தின் படம் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றன.

அதேபோல பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தின் நுழைவுவாயில் முன்பு அரண்மனை போன்ற வடிவமைப்பு வைக்கப்பட இருக்கிறது. மேலும் சட்டமன்ற - நாடாளுமன்ற கட்டிட பின்னணியில் ஜெயலலிதா நிற்பது போலவும், அதன் கீழே எடப்பாடி பழனிசாமி நடந்து வருவது போலவும் பிரமாண்ட வடிவமைப்பு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பெஞ்சமின் செய்து வருகிறார். மேலும் கூட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்ப்பதற்கான மண்டப வளாகத்தில் 8 இடங்களில் அகன்ற திரைகள் அமைக்கப்பட இருக்கின்றன.

கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

நாளை காலை 6 மணி முதலே கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடி ஆட்டம், தப்பாட்டம், குதிரைகள் அணிவகுப்பு, யானைகள் பிளிருவது போன்ற தத்ரூபமான வடிவமைப்பு என கடந்த கூட்டத்தை காட்டிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

மெயின் ரோட்டில் இருந்து கூட்டம் நடைபெறும் இடம் வரை சாலையின் இருபுறமும் வாழை, கரும்பு தோரணங்கள் கட்டப்பட இருக்கின்றன. கூட்டம் நடைபெறும் அரங்கில் காய்கறி, பழங்கள் கொண்ட பச்சை பந்தல் போடப்பட இருக்கிறது. மேலும் கூட்டத்தில் பங்கேற்போர் வயிறார சாப்பிடுவதற்காக காலை, மதியம் என தனித்தனி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.


Next Story