தமிழ்நாட்டு மக்களின் 'இதயக்கனி' அண்ணாமலை - கரு.நாகராஜன்
அண்ணாமலை தமிழ்நாட்டு மக்களின் ‘இதயக்கனி’ என்று பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக - பாஜக இடையேயான மோதல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்களை கண்டித்த கரு.நாகராஜன் தமிழ்நாட்டு மக்களின் 'இதயக்கனி' அண்ணாமலை என்று கூறினார்.
பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் கூறியதாவது,
எங்கள் மாநிலத்தலைவர் இன்றைக்கு தமிழ்நாடு மக்களின் இதயக்கனியாக இருக்கக்கூடிய அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றோர் தோன்றியதெல்லாம் பேசி, தரக்குறைவாக பேசி, உள்நோக்கத்தோடு பேசி அவர் மீது களங்கம் சுமத்த முயற்சிக்கின்றனர். அண்ணாமலையை செல்லூர் ராஜூ தலையாட்டி பொம்மையாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு மக்கள் மனதில் மாற்றத்தை தரக்கூடிய தலைவர் அண்ணாமலை என்ற நிலையை அவர் உருவாக்கியுள்ளார். அண்ணாமலை பற்றி பேசுகிற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எவருக்கும் அண்ணாமலை அளவிற்கு சக்தியோ பலமோ மக்களுடைய தலைமையை ஏற்கக்கூடிய பிரதிநிதித்துவமோ அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு கிடையாது. அவருக்கு இருக்கும் ஆற்றல் கிடையாது.
அண்ணாமலை பற்றி பேசும் தகுதி கூட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இந்த 3 பேருக்கு கிடையாது.
தஞ்சாவூர் பொம்மை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம் கோமாளியாகவும் வைக்கலாம் என்று தெர்மாகோல் முன்னாள் அமைச்சர் பேசுவது தான் கோமாளித்தனமாக உள்ளது.
அன்பு சகோதரர் சிவி சண்முகம் அவர் பேசினால் என்ன பேசுகிறார் என்று பிறகு அவரை கேட்டாலே தெரியாது. வாய்க்கு வந்தபடியெல்லாம் சிவி சண்முகம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் பேசியது அனைத்துமே அபத்தமானது.
அண்ணாமலை என்பவர் தனி நபர் அல்ல. தமிழக பாஜக என்று தனியாக கட்சி இங்கு கிடையாது. பாஜக என்பது தேசத்திற்கு ஒரே கட்சி தான். அதில் உள்ள தலைவர்களில் மாநிலத்தை பார்க்கும் தலைவர் அண்ணாமலை. இது தனிக்கட்சி கிடையாது. தனித்திட்டங்களோடு அண்ணாமலை செயல்படுவது இல்லை.
பாஜகவை பொறுத்தவரை கட்சி பதவியை விட மக்களுக்கு சேவை தான் முதல் கொள்கை. மக்களுக்கு சேவை செய்வது தான் பாஜக லட்சியம், நோக்கம். அதை திறம்பட செய்யக்கூடிய தலைவர் அண்ணாமலை என்று மக்கள் அவருக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்
அண்ணாமலை வளர்ச்சியை பொருக்கமுடியாமல், அவருடைய ஆற்றல் மிகுந்த செயல்பாடுகளை பார்த்து பொறாமைபட்டு காழ்புணர்ச்சியோடு உள்நோக்கத்தோடு சிவி சண்முகம், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் போன்றோர் பேசுவதை மக்கள் எள்ளி நகையாடிக்கொண்டிருக்கின்றனர்.
யாரை பார்த்து என்ன? பேசுகிறார்கள் ஏன் இவர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள் என்று மக்கள் சிந்திக்கத்தொடங்கிவிட்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அவர்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். கூட்டணி கட்சி தலைவரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற சிந்தனை யாருக்கும் இருக்கக்கூடாது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்த கட்சிக்கும் இருக்கக்கூடாது. அது தவறு கண்டிக்கத்தக்கது.
இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெறுகிறது என்ற உடன் எங்களுக்கெல்லாம் மனதிலே அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அண்ணன் எடப்பாடியார் கூட்டியுள்ளார் இப்படியேல்லாம் நீங்கள் பேசியது தவறு என்று கூறி அந்த 3 முன்னாள் அமைச்சர்கள் (ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜூ) மீதும் கண்டன தீர்மானம் வருமோ? என்று நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் அதற்கு மாறாக எங்கள் மாநில தலைவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்ததும், அந்த கண்டன தீர்மானத்திற்கு முன்பாக பாஜகவுக்கும், அம்மாவுக்கும், அதிமுகவுக்கும் இருக்கும் தொடர்புகளையெல்லாம் சுட்டிக்காட்டியதும் நாங்கள் வியப்போடு பார்த்தோம்.
அம்மா (அதிமுக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா) மீது நாங்கள் மட்டுமல்ல பாரத பிரதமர் உள்பட அனைவரும் மரியாதை வைத்துள்ளோம். அவரை போற்ற தயாராக உள்ளோம் அதில் எந்த மாறுபாடும் இல்லை.
இந்தியாவில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டுமா என்று கேட்ட போது இந்தியாவில் கட்டாமல் அமெரிக்காவிலா கட்டுவார்கள் என்று கேட்ட தலைவி ஜெயலலிதா. அவர் மீது என்றைக்கும் எங்களுக்கு மரியாதை உண்டு
ஆனால் ஜெயலலிதா பெயரை வைத்து அரசியல் செய்யும் இவர்கள் எங்கள் தலைவர் அண்ணாமலை மீது அவதூறு பேசுவதும் அவரை குறை கண்டுபிடிப்பதும் குறை சொல்வதும் அவரின் செயல்பாடுகளை குறை சொல்வதும் அதுவும் பாஜக என்று கூறாமல் அவரை தனிமைப்படுத்தி கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. இதை நாங்கள் கண்டிக்கிறோம்.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடியார் ஒரு சிறந்த பண்பாளர். அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குறித்து பேசுவதற்கு முன்பு, பேசிய பிறகு அவர் எப்படியெல்லாம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், இப்படியெல்லாம் நீங்கள் பேசக்கூடாது.
தலைமையேற்றிருக்கக்கூடிய பொதுச்செயலாளரான நான் பேசுகிறேன் என்று அவர் பேசலாம். டெல்லியில் உள்ள தலைவர்களை தொடர்பு கொள்ளலாம்.
எத்தனையோ வாப்புகள் தெளிவாக இருக்கும் நிலையில் கடந்த மாதம் கூட அண்ணன் எடப்பாடியார் தலைமையிலே முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் ஒன்றாக சேர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். நீண்ட நேரம் பேசினார்கள். அப்போது எங்கள் மாநிலத்தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார். அப்படியொரு இயல்பான சூழ்நிலை தானே இருக்கிறது நமக்குள். உங்களுக்குரிய குறைகள் கருத்துக்கள் இருக்குமேயானால் அது குறித்து நீங்கள் டெல்லியில் தெரிவிக்கலாம்.
அதை விடுத்து மாநில தலைவரை தனிமைப்படுத்தி எதோ மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லாத நிலை போல நீங்கள் கற்பனையோடு நீங்கள் தீர்மானங்கள் போடுவது வருத்தத்திற்குரியது, வேதனையளிக்கிறது.
கண்டிக்க வேண்டியவர்களை கண்டிக்காமல் எங்கள் மாநிலத்தலைவர் மீது கண்டனத்தீர்மானம் போட்டதை நாங்கள் எதிர்க்கிறோம்.
தமிழ்நாடு அரசியலில் பெரிய மாற்றத்தை தரக்கூடிய தலைவராக அண்ணாமலை விளங்குகிறார். அவரின் பேச்சுக்கும் செயலுக்கும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மரியாதை உருவாகியுள்ளது.
அரசியலை பற்றி சிந்திக்காத மக்கள் கூட அண்ணாமலையை பார்த்து அரசியலை சிந்திக்க முன்வருகின்றனர். இதையெல்லாம் பார்த்து சிலர் பேசுவார்கள்
கூட்டணி என்பது பொதுவான ஒன்று. கூட்டணியில் பெரியண்ணன் வேலைக்கு இடமில்லை. அதில் சிறிய கட்சி பெரிய கட்சி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.
பெரிய கட்சி என்பது இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடைய தலைமை பாஜக தான். இங்கு இருக்கிற கட்சிகளை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
எல்லோருக்கும் வெற்றியில் பங்கு உள்ளது. சிவி சண்முகம் கூறியதுபோல 4 இடங்களில் நாங்கள் தான் வெற்றிபெற வைத்தோம் என கூறுகிறார்கள் தீர்மானம் போடுகிறார்கள். 66 இடங்களில் நாங்களும் வெற்றிக்கு உதவினோம்.
66 இடங்களில் வெற்றிபெற்றபோது சிவி சண்முகத்தால் வெற்றிபெற முடியவில்லை. திமுகவுக்கு வாய்ப்பளிக்கும் சூழ்நிலையை அதிமுக உருவாக்கக்கூடாது.
கூட்டணி குறித்து அதிமுக மறுபரிசீலனை செய்யட்டும். கூட்டணியை முடிவு செய்வது அகில இந்திய தலைவர்கள் அவர்களோடு (பாஜக) அவர்கள் (அதிமுக) பேசட்டும்.
எங்கள் தலைவரை (அண்ணாமலை) கேட்காமலா அவர்கள் (பாஜக தலைமை) முடிவு எடுப்பார்கள். நிச்சயம் கேட்பார்கள். கூட்டணி என்பதற்கு இன்னும் காலம் உள்ளது.
எங்கள் கட்சி தமிழ்நாட்டில் வளரவேண்டும் அதை தான் அண்ணாமலை செய்கிறார். தமிழ்நாடு மக்கள் இதயத்தில் இடம்பெற்றுள்ளோம் அதை எப்படி அரசியல் வெற்றியாக மாற்றுவது அதை தான் நாங்கள் சிந்திக்க முடியும்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜெயலலிதா பெயரையோ, கட்சி பெயரையோ எங்காவது அண்ணாமலை கூறினாரா? இல்லை.
சிவி சண்முகத்தை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. சிவி சண்முகமும், செல்லூர் ராஜூவும் மனம்போன போக்கில் பேசக்கூடியவர்கள். அவர்கள் பேட்டியை எடுத்து பார்த்தீர்களானல் காமெடியாக தான் இருக்கும்.
யார் யாருக்கு சுமை என்பது மக்களுக்கு தெரியும். யார் யாரை சுமந்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
அரசியலுக்காக கையெந்தி பிழைக்கும் நிலைமை அண்ணாமலைக்கு இல்லை. ஒரு மாற்றத்திற்காக தமிழ்நாடு அரசியலுக்கு அண்ணாமலை வந்துள்ளார்' என்றார்.