ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரி ஈபிஎஸ் உடன் அண்ணாமலை சந்திப்பு - ஜெயக்குமார் பேட்டி


ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரி ஈபிஎஸ் உடன் அண்ணாமலை சந்திப்பு - ஜெயக்குமார் பேட்டி
x

ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்ததாக ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நிறைவுபெற்றது. எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த சந்திப்பின் போது சிடி ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர், ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு தரவேண்டும் என்றும் மேலும் நாளை ஜனாதிபதி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக தலைவர்கள் கட்டாயம் நேரில் டெல்லிக்கு வரவேண்டும், வேட்பு மனுத்தாக்கலின் போது உடனிருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த ஜெயக்குமார், ஒற்றை தலைமை வேண்டும் என்பதே பொதுக்குழுவின் முடிவு மற்றும் அதிமுக தொண்டர்களின் விருப்பம் என்று கூறினார். மேலும் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே விருப்பம் என்றும் கூறினார்.


Next Story