ஒரே நாளில் 34 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடியால் கஞ்சா வியாபாரிகள் கலக்கம்


ஒரே நாளில் 34 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடியால் கஞ்சா வியாபாரிகள் கலக்கம்
x

சென்னையில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை வழக்கில் சிக்கிய 34 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த அதிரடி நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சென்னை

சென்னையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் 'போதை பொருள் தடுப்பு நடவடிக்கை' என்ற பெயரில் போலீசார் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் வாங்கி குவித்த சொத்துகள், வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை வழக்கில் 1,351 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இதுவரையில் 908 பேரின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். இதில் 470 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

மீதமுள்ள நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 34 பேரின் வங்கி கணக்குகள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவின்பேரில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் கஞ்சா வியாபாரிகள் 504 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.


Next Story