கூட்டணியில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது - அதிமுகவுக்கு பாஜக பதிலடி
19 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தை ஜெயக்குமார் செடி என்கிறார் என்று பாஜக துணை தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.
தினந்தோறும் பேட்டி கொடுப்பது அவருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. எங்கள் மாநிலதலைவர் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. எங்கள் தலைவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார். தமிழக மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிஸ்டத்தை சரிசெய்திட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அவர் என்றுமே உள்ளதை உள்ளபடி பேசுபவர் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.
பதவிக்கும், பவிசுக்கும் ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை. பல்வேறு புதிய திட்டங்களோடு,மக்கள் வாழ்வு வளம் பெறும் கனவுகளோடு அரசியலுக்கு வந்திருக்கும் அவர் என்றும் மாறப் போவதில்லை. ஜெயக்குமார் போன்ற அரசியல்வாதிகள் தான் தங்களை நேர்வழிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஜெயக்குமார் நுனி மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிப்பகுதியை வெட்டிக் கொண்டு இருக்கிறார். இது போன்ற பேட்டிகளால் பாதிப்பு உங்களுக்குத் தான். உலகின் பெரிய அரசியல் இயக்கத்தை, 19 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தை செடி என்கிறார். என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்று புரியவில்லை.
தென்சென்னை பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று அமித்ஷா கலந்து கொண்டது கூட ஜெயக்குமாருக்கு விரக்தியை தந்திருக்கும் என்று கருதுகின்றேன். எங்கே தன் மகன் ஜெயவர்தன் போட்டியிட விரும்பும் தொகுதி பறிபோய் விடுமோ என்று கலங்கிப் போயிருப்பார்.
கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான், இதில் பெரியண்ணன் வேலை யாருக்கும்
கிடையாது. எனவே எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆங்கிலப் பத்திரிகை பேட்டியை திசை திருப்பி குழப்பம் செய்திட வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
அண்ணாமலை பேசுவது கூட்டணி தர்மத்தை மீறிய செயல். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, விமர்சனம் செய்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜெ.பி.நட்டாவும், அமித்ஷாவும் அண்ணாமலையை கண்டிக்க வேண்டும்.கத்துக்குட்டி அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியாது. திமுக அரசினை விமர்சிக்காமல், கூட்டணி தர்மம் கூட இல்லாமல் அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்கிறார்.
பாஜக மாநில தலைவர்களாக இருந்தவர்கள் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக இருந்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுய விளம்பரத்திற்காக பேசி வருகிறார்.வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைப்பது போல் அண்ணாமலையின் செயல் உள்ளது.
அரசியலில் அதிமுக ஆலமரம், பாஜக வெறும் செடி; தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வைத்தால்கூட 30 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" "கூட்டணியில் இருந்துகொண்டே விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது;சட்டமன்றத் தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற அதிமுகதான் காரணம்;
அண்ணாமலை விமர்சனம் தொடர்ந்தால் கூட்டணியில் விரிசல் ஏற்படும். விமர்சனம் தொடர்ந்தால் கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும். மாநில பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை' என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.