ஆடியோவில் வெளியானது அமைச்சர் பிடிஆரின் குரல் தானா? என ஆய்வு செய்ய கோரிக்கை - கவர்னரை சந்தித்த பின் பாஜக தலைவர்கள் பேட்டி
ஆடியோவில் வெளியானது அமைச்சர் பிடிஆரின் குரல் தானா? என ஆய்வு செய்ய கவர்னரிடம் கோரிக்கை விடுத்தோம் என்று பாஜக தலைவர் வி.பி.துரைசாமி கூறினார்.
சென்னை,
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக பேசியிருந்ததாக கூறப்படும் ஒலி நாடாவின் (ஆடியோ) உண்மை தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி கவர்னர் ஆர்.என். ரவியை பாஜக தலைவர்கள் குழு சந்திக்கும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் ஆர்.என். ரவியை பாஜக தலைவர்கள் இன்று மாலை சந்தித்தனர். பாஜக தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது ஆடியோவில் வெளியானது அமைச்சர் பிடிஆரின் குரல் தானா? என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கவர்னரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் வி.பி.துரைசாமி,
ஆடியோவில் வெளியான குரல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குரல் தானா? அல்லது வேறு யாருடைய குரலா? என்பது குறித்து தடயவியல் ஆய்வு செய்ய வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை விடுத்தோம்.
இந்த ஆடியோ அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோவா? என்பதை உறுதிபடுத்த தான் கவர்னரிடம் வந்துள்ளோம். இந்த ஆடியோ விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவர்னரிடம் கோரிக்கை விடுத்தோம். அவர் அந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதியளித்துள்ளார்.
ஆடியோவில் வெளியானது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் குரல் தான் என்பதில் பாஜகவுக்கு நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் அரசாங்க கருவூலத்திற்கு சென்று நன்மையை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் தங்கள் பாக்கெட்டிற்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள் என்பது தான் எங்கள் குற்றச்சாட்டு' என்றார்.