பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும்.. வழக்கு தொடருவேன்: சீமான் பரபரப்பு பேட்டி


பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும்.. வழக்கு தொடருவேன்: சீமான் பரபரப்பு பேட்டி
x

நாட்டின் தேசிய மலர் என கூறப்படும் தாமரை சின்னத்தை ஏன் ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கினீர்கள்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை:

நாம் தமிழர் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், திடீர் திருப்பமாக, கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.

இந்திய தேர்தல் ஆணையம், கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கியதால் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். கரும்பு விவசாயி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது குறித்து அவர் கூறியதாவது:-

தேர்தல் சின்னம் தொடர்பான மனுக்களை தேர்தல் ஆணையம் பெற்று, சின்னம் ஒதுக்கும் நேரம் வரும்போது விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கவேண்டும். ஆனால், முதலில் விண்ணப்பித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை உடனடியாக தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? கேட்டால் அவர் முதலில் விண்ணப்பித்ததாக சொல்கிறார்கள்.

நாங்கள் 6 தேர்தல்களில் போட்டியிட்டு, கரும்பு விவசாயி சின்னத்தை போராடி மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். இப்போது திடீரென மற்றொருவருக்கு ஒதுக்குவது என்ன நியாயம்? இதில் இங்குள்ள பா.ஜ.க.வுக்கு எந்த தொடர்பும் இல்லையா? இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கவில்லை அதற்குள் ஏன் சின்னத்தை ஒதுக்கி கொடுத்தார்கள்?

இதன்மூலம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்க சதி நடக்கிறது. முதலில் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். தேர்தல் முடிந்த பின் இதுதொடர்பாக வழக்கு தொடருவேன்.

நாட்டின் தேசிய மலர் என கூறப்படும் தாமரை சின்னத்தை ஏன் ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கினீர்கள்? நான் மயில் சின்னம் கேட்டபோது, தேசிய பறவை என்று சொல்லி அந்த சின்னத்தை வழங்க மறுத்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு மட்டும் தேசிய மலரை சின்னமாக கொடுத்தது ஏன்? இதுதான் ஜனநாயகமா?

தமிழகத்தில் யார், எங்கு போட்டி என்பதை தேசிய தலைமை அறிவிக்கும் என்கிறார் அண்ணாமலை. அவர் கட்சியின் தலைவரா? அண்ணாமலை என்பவர் பா.ஜ.க.வின் மேனேஜர்தானே தவிர தலைவர் அல்ல.

ஆனால் நாம் தமிழர் கட்சியில் யார் எந்த இடத்தில் போட்டியிடவேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன். ஏனென்றால் இது என் கட்சி. சின்னத்தை எடுத்துவிட்டால் முடக்கிவிடலாம் என நினைக்கிறார்கள். இந்த அநீதியை தேர்தல் ஆணையம் இனி செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story