வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தி.மு.க அழைப்பு


வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தி.மு.க அழைப்பு
x
தினத்தந்தி 19 March 2024 6:54 AM GMT (Updated: 19 March 2024 9:03 AM GMT)

21 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் இந்த வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நாளை வெளியிடுகிறார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க.,விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ள தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தஞ்சை, தேனி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. , சீனியர் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதுடன் புதுமுகங்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் என்று தெரியவந்துள்ளது.

21 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் இந்த வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நாளை வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனிடையே, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது. நாளை நண்பகல் 12 மணிக்கு இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Next Story