எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு


எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு
x

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால், கடலூர் விசைப்படகுகளை மாமல்லபுரம் மீனவர்கள் சிறைப்பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

காஞ்சிபுரம்

மாமல்லபுரம்,

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்த 2 விசைப்படகுகள் எல்லைத்தாண்டி வந்து மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வலை விரித்து கடம்பா மீன் பிடித்தனர். அப்போது மாமல்லபுரம் மீனவர்கள் கரைப்பகுதியில் தங்கள் படகுகளை நிறுத்தி, போட்டு வந்த வலைகளை விசைப்படகில் வந்த மீனவர்கள் அவர்களின் பெரிய வலைகளை போட்டு சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த மாமல்லபுரம் மீனவர்கள் 3 படகுகளில் கடலுக்கு சென்று தங்கள் வலைகளை சேதப்படுத்தியதை கண்டிக்கும் வகையில் 2 விசைப்படகினையும் நங்கூரம் கொண்டு நிறுத்தி, அவை மாமல்லபுரம் கடல் எல்லையை விட்டு நகராதபடி சிறைப்பிடித்தனர்.

மேலும் 2 விசைப்படகில் வந்த 15 மீனவர்களையும் படகில் ஏற்றி வந்து அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்து அவர்களை சிறை பிடித்தனர். பின்னர் இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் துறை மற்றும் கடலோர காவல் படைக்கும், தங்கள் எல்லை பகுதியில் தடையை மீறி வந்த 2 விசை படகுகளை சிறைபிடித்து வைத்திருப்பதாக தகவல் தெரிவித்தனர். பிறகு காரைக்கால், கடலூர் மாவட்ட மீனவர் சங்க நிர்வாகிகளுக்கு மாமல்லபுரம் மீனவர் பஞ்சாயத்து சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை மாமல்லபுரம் வரவழைத்தனர்

தொடர்ந்து மாமல்லபுரம் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகினை விடுவிப்பது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது காரைக்கால், கடலூர் மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் இனி எல்லை தாண்டி வந்து மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்று அறிவுரை கூறி, எழுத்து மூலமாக அவர்களிடம் எழுதி வாங்கினர். பிறகு இரு தரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு ஏற்பட்டதால் மாமல்லபுரம் கடலில் நங்கூரம் கொண்டு சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால், கடலூர் பகுதி விசைப்படகுகள் பின்னர் விடுவிக்கப்பட்டன. இச்சம்பவத்தால் மாமல்லபுரம் மீனவர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது


Next Story