அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் எடுத்துச்சென்ற விவகாரம்: ஐகோர்ட்டில் இன்று விசாரணை


அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் எடுத்துச்சென்ற விவகாரம்: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x

சி.பி.ஐ. விசாரணை கேட்டு சி.வி.சண்முகம் மீண்டும் கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்துச்சென்ற வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு சி.வி.சண்முகம் மீண்டும் கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அ.தி.மு.க. சிறப்பு பொதுக்குழு கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சென்றார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

மேலும் அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் எடுத்துச்சென்று விட்டதாக ராயப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சி.பி.ஐ. விசாரணை கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அ.தி.மு.க. அலுவலகம் முன்பு நடந்த சம்பவம் குறித்து பதிவான 3 வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றிவிட்டதாக டி.ஜி.பி. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்துக்கொண்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்தநிலையில், சி.வி.சண்முகம் தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

சி.பி.ஐ. விசாரணை கேட்டு நான் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னரே, போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். என் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், இதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவ இடத்துக்கு வரவே இல்லை. ஆதாரங்களை சேகரிக்கவில்லை. எந்த ஒரு விசாரணையும் செய்யவில்லை. தமிழ்நாடு போலீசார் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். அதனால், என்னுடைய பிரதான மனுவில் கேட்ட கோரிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு மனுதாரர் வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரிப்பதாக கூறினார்.


Next Story