தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு


தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
x

ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தபடி, காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை பங்கிட்டு தருவதில் கர்நாடக அரசு மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காமல் உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூடியபோது, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை ஒழுங்காற்றுக்குழு கேட்டுக்கொண்டது. ஆனால் கர்நாடகம் தண்ணீரை திறக்கவில்லை.

அவசர கூட்டம்

இதற்கிடையே தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த விசாரணையின்போது, நீர் பங்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டியிருக்கும் என்பதால், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

இதன்படி அவசர கூட்டம் டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் நேற்று நடைபெற்றது. இது ஆணையத்தின் 24-வது கூட்டம் ஆகும். கூட்டத்துக்கு மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை தாங்கினார். ஒழுங்காற்றுக்குழுவின் தலைவர் வினீத் குப்தா முன்னிலை வகித்தார்.

தமிழக அதிகாரிகள் வற்புறுத்தல்

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சந்தீப் சக்சேனா தலைமையில் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர். இதைப்போல கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளும் நேரில் கலந்து கொண்டனர். ஆனால் கர்நாடக தரப்பில் இருந்து அதிகாரிகள் யாரும் நேரடியாக பங்கேற்கவில்லை. அவர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் வழக்கம்போல நீர் இருப்பு, மழை அளவு, பாசன அளவு போன்ற தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்த தகவல்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது, வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அதிகாரிகள் வற்புறுத்தினார்கள். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார்கள்.

5 ஆயிரம் கனஅடி நீர்

இதனைத்தொடர்ந்து ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார், ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தபடி தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்துக்கு உத்தரவிட்டார். மேலும் ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை வருகிற 26-ந் தேதி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 3.50 மணிக்கு முடிவடைந்தது.

மத்திய மந்திரியுடன் சந்திப்பு

இதனைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணைய தலைவரும், ஒழுங்காற்றுக்குழு தலைவரும் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து கூட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவு, பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தெரிவித்தனர்.


Next Story