'மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' - முத்தரசன் வலியுறுத்தல்
மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து திட்டவட்டமான பேச்சு வார்த்தை தொடங்கியதாக தெரியவில்லை என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை,
மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீன்பிடி படகுகளில் நாகபட்டினம் கோடியக்கரை பகுதியில் இருந்து தங்கு கடல் மீன் பிடிப்புக்காக கடந்த 15.11.2023 ஆம் தேதி மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். இதில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்கள் கோடியக்கரைக்கும் - பருத்தித் துறைக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அவர்கள் 22 பேர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
கடலில் மீன் பிடிப்பது மட்டுமே வாழ்வாதாரம் என்ற வாழ்க்கை நிலையில் உள்ள கடலோர மீனவக் கிராமங்கள் அனைத்தும் கடுமையான வேதனையிலும், பாதுகாப்பற்ற பரிதவிப்பிலும் வாழ்ந்து வருகின்றன. தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையில் இலங்கை கடற்படையின் அத்துமீறி மறுப்பதை இந்திய ஒன்றிய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும், மீன்பிடி தொழில் முழுமையாக பாதுகாப்புடன் நடைபெறும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என மீனவர்களும், அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து பா.ஜ.க. அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசும், முதல்-அமைச்சரும், நாட்டின் பிரதமர், மத்திய அரசின் வெளியுறவுத் துறை மந்திரி உள்ளிட்ட அனைவருக்கும் மீனவர் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடு செய்ய தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனாலும் இலங்கை அரசுடன் இந்திய அரசு மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து திட்டவட்டமான பேச்சு வார்த்தையை தொடங்கியதாக தெரியவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய நாட்டின் குடிமக்கள் தான் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவித்து, அவர்களது உடைமைகளுடன் நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும். நீண்ட கடற்கரையை பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான மீனவக் கிராமங்களில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நாட்டின் பிரதமர் மோடியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."
இவ்வாறு முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.