சென்னை நகைக்கடையில் துணிகரம்: 9 கிலோ தங்க-வைர நகைகள் கொள்ளை


சென்னை நகைக்கடையில் துணிகரம்: 9 கிலோ தங்க-வைர நகைகள் கொள்ளை
x

சென்னை நகைக்கடையின் கதவில் துளைபோட்டு 9 கிலோ தங்க-வைர நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அகரம் சந்திப்பில் 'ஜெ.எல் கோல்ட் பேலஸ்' என்ற பெயரில் நகைக்கடை உள்ளது. அந்த பகுதியில் இது பெரிய நகைக்கடை ஆகும். கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் பெயர் ஜெயச்சந்திரன் (வயது 60).

ஆரம்பத்தில் சிறிய அளவில் நகைப்பட்டறையை நடத்தி பெரிய நகைக்கடைகளுக்கு நகைகள் செய்து கொடுத்து வந்தார். பின்னர் படிபடியாக முன்னேறி இந்த நகைக்கடையை தொடங்கினார்.

இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்தும் 'பார்க்கிங்' வசதியும், முதலாவது மாடியில் நகைக்கடையும் செயல்பட்டு வந்தது. 2-வது தளத்தில் ஜெயசந்திரன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த கடையில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஜெயச்சந்திரன் கடையின் ஷட்டர் கதவை உள்பக்கமாக பூட்டினார். கடைக்குள் இருந்தே அவருடைய வீட்டுக்குள் செல்லும் வசதி உள்ளது. அதன் வழியாக அவர் வீட்டுக்கு சென்றார்.

ஜெயச்சந்திரன் நேற்று காலை 9 மணிக்கு வீட்டிற்குள் இருந்தபடியே கடைக்கு உள்ளே செல்லும் வழியாக கடையை திறக்க வந்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கடையில் இருந்த நகை பெட்டிகள் எல்லாம் காலியாக இருந்தன. சிறிய, சிறிய நகைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. கடைக்குள் இருந்த பாதுகாப்பு பெட்டகமும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இந்த காட்சிகளை பார்த்தவுடன் கடையில் பெரியளவில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை ஜெயச்சந்திரன் உணர்ந்தார்.

கடையின் முன்பக்க ஷட்டர் கதவில் 2 பேர் நுழையும் வகையில் சதுர வடிவில் பெரிய துவாரம் போடப்பட்டிருந்தது.

இரும்பு பெட்டகத்தில் இருந்த அத்தனை நகைகளையும் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் மூட்டைக்கட்டி அள்ளி சென்றுவிட்டனர். சுமார் 9 கிலோ தங்க நகைகளையும், ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளையும் கொள்ளையர்கள் சுருட்டி அள்ளி சென்றுவிட்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயச்சந்திரன் அப்படியே தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார். தகவலறிந்து அவரது மனைவியும், மகன் ஸ்ரீதரும் கடைக்குள் ஓடி வந்தனர்.

ஸ்ரீதர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து திரு.வி.க.நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ரம்யா பாரதி, துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர்கள் செம்பேடு பாபு, தமிழ்வாணன், அழகேசன், லட்சுமணன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய போலீஸ் படையினர் விரைந்து வந்து அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

ஜெகன் தலைமையில் கரிகாலன் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது 100 மீட்டர் தூரமுள்ள திரு.வி.க நகர் பஸ் நிலையம் அருகே ஓடிச் சென்று திரும்பியது. துணை கண்காணிப்பாளர் பஞ்சாட்சரம் தலைமையில் கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து அந்த பகுதி முழுவதும் தகவல் பரவியது. பொதுமக்கள் கூட்டமாக நகைக்கடையின் முன்பு கூடினார்கள். நகைக்கடையில் இருந்து 20 மீட்டர் தூரத்தில் அகரம் சந்திப்பு போலீஸ் பூத் உள்ளது. ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் வெவ்வேறு திசையில் செம்பியம், திரு.வி.க நகர், பெரவள்ளூர் ஆகிய 3 போலீஸ் நிலையங்கள் இருக்கின்றன.

இந்த நகைக்கடை பகுதியில் எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும். இந்த சூழ்நிலையில் கொள்ளையர்கள் துணிச்சலாக நகைக்கடையின் படிக்கட்டு வழியாக ஏறி முதல் மாடிக்கு சென்று வெல்டிங் மூலம் ஷட்டர் கதவை உடைத்து இந்த துணிகர கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கூடுதல் கமிஷனர் அன்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட நகை கடை உரிமையாளரும், அவருடைய குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். எனவே அவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியவில்லை. கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.

4 பேருக்கு மேல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். கொள்ளையர்களின் கைரேகை கிடைத்துள்ளது. ஆனால் கொள்ளையர்கள் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய கருவியை கையோடு எடுத்து சென்றுள்ளனர். இதனால் கடைக்குள் இருந்த கேமரா காட்சி மூலம் கொள்ளையர்களை அடையாளம் காண முடியவில்லை. கடைக்கு வெளியே சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

கொள்ளையர்கள் பற்றி ஓரளவுக்கு துப்பு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் 6 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறோம். அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னையில் இதுவரையில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளை சம்பவங்களில் இதுவும் ஒரு பெரிய சம்பவமாக கருதப்படுகிறது. அந்த பகுதியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story