அரசு காலியிடங்களில் ஆடு, கோழி வளர்க்க அனுமதிக்க வேண்டும்
அரசு காலியிடங்களில் ஆடு, கோழி வளர்க்க அனுமதிக்க வேண்டும்
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. திருநங்கைகள், திருநம்பிகளுக்கு சமூக பொருளாதார உதவிகளான அடையாள அட்டைகள், ரேஷன் கார்டு, வீட்டுமனைப்பட்டா, பொருளாதார செயல்பாடுகளுக்கு ஆதரவு அளித்தல், குறுகியகால தங்கும் இல்லங்கள், கல்வி உதவித்தொகை, திறன் வளர்ப்பு பயிற்சிகள், சுயஉதவிக்குழுக்களுக்கு ஆதரவு அளித்தல், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட திட்டங்கள், உதவிகள் வழங்குவது தொடர்பாக விளக்கி கூறப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 குழுக்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், திருநம்பிகள் கலந்து கொண்டார்கள். இதில் திருநங்கைகள் திருப்பூர் மாநகராட்சியில் கடை வைப்பதற்கான முன்பணத்தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், மாத வாடகை மட்டும் செலுத்துகிறோம் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். குடிசைமாற்று வாரியத்தில் இருந்து பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆடு, மாடு மற்றும் கோழி வளர்க்க முடியாத காரணத்தால் அருகில் உள்ள காலியான அரசு நிலங்களை பயன்படுத்திக்கொள்ள கோரிக்கை வைத்தார்கள்.
இலவச வீட்டுமனைப்பட்டா, சுயதொழில் செய்ய மானியம், ஆவின் பாலகம் அமைத்தல், சமுதாயகூடம், இலவச தையல் எந்திரம், அரசு விழாக்களில் கடைகள் அமைக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் உதவிகள் வேண்டி இந்த கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட சமூக நல அதிகாரி ரஞ்சிதா தேவி, திருநங்கைகள், திருநம்பிகள் கலந்து கொண்டனர்.
----------------