வளசரவாக்கத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் சினிமா மேக்கப் மேன் கைது


வளசரவாக்கத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் சினிமா மேக்கப் மேன் கைது
x

வளசரவாக்கத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் சினிமா மேக்கப் மேன் கைதானார். ரூ.15 ஆயிரம் கடனுக்காக கொள்ளையனாக மாறியது தெரியவந்தது.

சென்னை

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன் (வயது 35). இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சரோஜா (30). இவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு பள்ளியில் இருந்து தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அறையில் மறைந்திருந்த மர்மநபர், திடீரென ஓடி வந்து சரோஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் டிப்-டாப்பாக உடையணிந்த வாலிபர் ஒருவர், செல்போனில் பேசியபடியே சர்வ சாதாரணமாக அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் நடந்து வருகிறார். கண்காணிப்பு கேமரா இருக்கும் இடத்தில் தனது முகத்தை மறைத்தபடியே நுழைவதும், சிறிது நேரத்துக்கு பிறகு அவசர அவசரமாக படிக்கட்டிகளில் இருந்து இறங்கி தப்பி ஓடிவரும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆனந்தன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சினிமாவில் மேக்கப் மேனாக பணிபுரிந்து வரும் அவர், ஒருவரிடம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர் பணத்தை திருப்பி கேட்டதால் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து முருகன் வீட்டில் திருடியது தெரிந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியானதால் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ என பயந்து, அடையாளம் தெரியாமல் இருக்க ஆனந்தன் மொட்டை அடித்து சுற்றியதும் தெரியவந்தது.

ரூ.15 ஆயிரம் கடனுக்காக கொள்ளையனாக மாறிய ஆனந்தனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story