மாநகர பஸ் டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் கடிவாளம் - சாலையின் நடுவே நிறுத்தினால் நடவடிக்கை


மாநகர பஸ் டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் கடிவாளம் - சாலையின் நடுவே நிறுத்தினால் நடவடிக்கை
x

சென்னையில் பஸ் நிறுத்தத்தில் மாநகர பஸ்கள் முறையாக நிறுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை

சென்னையில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் 'பீக் அவர்' எனப்படும் பள்ளி மற்றும் அலுவலகம் செயல்படும், முடியும் நேரமான காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் மாநகர போக்குவரத்து டிரைவர்கள் பலரும் சாலை விதிகளை கடைபிடிப்பது இல்லை. நடுரோட்டிலேயே பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறார்கள். அவர்களுக்கு போட்டியாக ஆட்டோ டிரைவர்களின் செயல்பாடும் இருக்கிறது என்பது வாகன ஓட்டிகளின் பொதுவான குற்றச்சாட்டு ஆகும்.

பஸ் நிறுத்ததை ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பதால் சாலையின் நடுவே பஸ்சை நிறுத்த வேண்டிய சூழல் இருக்கிறது என்பது மாநகர பஸ் டிரைவர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூடுதல் போலீஸ் கமிஷனர் சுதாகர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் மாநகர பஸ்கள் மற்றும் ஆட்டோக்களை போக்குவரத்து போலீசார் ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அவருடைய இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

பஸ் நிறுத்தங்களில் மாநகர பஸ்கள் முறையாக நிறுத்தப்படுகிறதா?, ஆட்டோக்களால் பஸ் நிறுத்தம் ஆக்கிரமிக்கப்படுகிறதா? என்பதை போக்குவரத்து போலீசார் நேற்று தீவிரமாக கண்காணித்தனர். சென்னை வேப்பேரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சில அடி தூரம் தள்ளி சென்று பஸ்சை நிறுத்திய டிரைவர்களை இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு கண்டித்தார். சாலை விதிகளை மதிக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. பயணிகளுக்கு சிரமத்தை அளிக்க கூடாது என்று அறிவுரை வழங்கினார். மீண்டும் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார். அதே நேரத்தில் பஸ் நிறுத்தத்தில் முறையாக பஸ்சை நிறுத்திய டிரைவர்களை கைகுலுக்கி பாராட்டினார்.

மாநகர பஸ் டிரைவர்களுக்கு கடிவாளம் போடும் போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கை பயணிகள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.


Next Story