பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறிரூ.63 லட்சம் மோசடி


பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறிரூ.63 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 22 Jun 2023 7:33 PM GMT (Updated: 23 Jun 2023 11:21 AM GMT)

திருப்பத்தூரில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

பங்கு சந்தையில் மோசடி

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 35) சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா ராணி (30), இல்லத்தரசி. பங்கு சந்தையில் பங்குகளை வாங்கி விற்பனை செய்து கொடுத்தும், ஆலோசனைகள் வழங்கும் தொழில் செய்து வருபவர் திருப்பத்தூர் என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் ஹேமாவதி (28), அவரது கணவர் பிரவீன்குமார் (29).

இவர்கள் இருவரும் சேர்ந்து ஜமுனாராணியிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சம் லாபம் வரும் என்று ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது.

அதனை நம்பிய ஜமுனாராணி ரூ.63 லட்சத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்ய கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் சில லட்சங்களை மட்டும் ஹேமாவதி, பிரவீன்குமார் பங்கு சந்தையில் முதலீடு செய்து மீதி பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கணவன்-மனைவி கைது

இதுகுறித்து ஜமுனா ராணி கேட்டதற்கு பங்கு சந்தையில் பங்குகளின் வீழ்ச்சி காரணமாக நஷ்டம் அடைந்து விட்டதாக அவர்கள் கூறினர். இந்தநிலையில் தன்னிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக ஜமுனா ராணி திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பரண்டு சுரேஷ் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட ஹேமாவதி மற்றும் பிரவீன்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story