கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி


கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x
தினத்தந்தி 29 Sep 2023 8:55 AM GMT (Updated: 29 Sep 2023 9:27 AM GMT)

கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புறநகர் பஸ் நிலையத்தை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டிய ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதனை சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பஸ் நிலையம், "கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட இருக்கிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார்.

தற்போது, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தையொட்டி ஜி.எஸ்.டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அக்டோபர் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.16.61 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளான அயனஞ்சேரி- மீனாட்சிபுரம் சாலை விரிவாக்கம், போலீஸ் அகாடமி சாலை- கூடுவாஞ்சேரி-ஊனமஞ்சேரி சாலை மற்றும் கூடுவாஞ்சேரி-மண்ணிவாக்கம்-ஆதனூர் சாலை ஆகிய பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இந்த பஸ் நிலையத்தில் முகப்பு வளைவு அமைக்கும் பணி ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்படும். போலீஸ் நிலையம் ரூ.14.80 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணிகள் நடைபெறவுள்ளன.

முடிச்சூர்-சென்னை வெளிவட்ட சாலையில் ஆம்னி பஸ் நிறுத்துமிடம் அமைக்கும் பணி ரூ.29 கோடி மதிப்பீட்டில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, வரலட்சுமி எம்.எல்.ஏ., செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சப்-கலெக்டர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், தாம்பரம் போக்குவரத்து போலீஸ் கமிஷனர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story